கவிதை எப்படி?!…
எனது கிறுக்கல்களை பன்னிரெண்டாம் வகுப்பிலேயே ஆரம்பித்து விட்டேன் என்றே நினைக்கின்றேன்.
கல்லூரியில் படிக்கும் போது என் கிறுக்கலை வாசிக்கவும் ஒரு நண்பன் இருந்தான்..
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி, அறிஞர் அண்ணாக் கல்லூரி…பெரும்பாலான கணித வகுப்புக்கள், ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருப்பார்… போரடிக்கும் போது மனதில் பட்ட எதையாவது கணித நோட்டின் பக்கங்களில் கிறுக்கிக் கொண்டிருப்பேன்.
அன்பு நண்பன் ஜொயல் தம்பிராஜ் வாங்கிப் படித்துவிட்டு கவிதை நன்றாக இருக்கின்றது என்பான்.
அப்படியா என்பதோடு சரி…
மீண்டும் ஜன்னலுக்கு வெளியே தெரியும் எதையாவதுப் பற்றி கிறுக்கிக் கொண்டிருப்பேன். ஆனால், எல்லா கிறுக்கல்களிலும் சமுதாயத்தைப் பற்றிய என் எண்ணங்கள் துறுத்திக்கொண்டிருக்கும்.
கல்லூரி விழாக்களிலும் எனது கிறுக்கல்கள் வாசிக்கப்படும்… வாசிப்பது மட்டும் வேரு யாராகவோ இருப்பார்கள்.
எனது கிறுக்கல்கள் பிறர் காதலுக்கும் சில நேரங்களில் காவடி தூக்கியதுண்டு…
எனது கிறுக்கல்கள் கவிதை என்ற பெயரில் முதலில் பல்லக்கில் ஏரியது நாகர்கோவிலில் இருந்து வெளிவந்த கின்னஸ் என்ற மாதமொருமுறை வரும் சிற்றிதழில் தான். அதைத்தாண்டி வேறு எந்த பத்திரிகைக்கும் அனுப்பியது இல்லை. காரணம் பிரசுரிப்பார்களோ மாட்டார்களோ என்ற தக்கக் கூண்டிற்குள் நான் அகப்பட்டிருந்தது தான்.
அதன் பின் என் கிறுக்கல்களை வேண்டிப்படித்தவன் என் முதுநிலைக் கல்லூரி தோழன் சாமுவேல். அதற்கு மதிப்பெண்களும் இட்டு மகிழ்ந்து கொள்வான்…
அதன் பின் என் கிறுக்கல்களை வாசிக்க யாரும் அகப்படவில்லை. எனக்கும் ஏனோ எதுவும் எழுதத்தோன்றவில்லை.
திருமணத்திற்கு பின் என் மனைவி எழுதச்சொல்லிக் கேட்டும் ஏனோ என் கிறுக்கல்களுக்கு மனமில்லைபோலும் வெள்ளைத்தாளை முத்தமிட.
இடையில் சில நேரங்களில் சில கிறுக்கல்கள்…2006-ல் வலைத்தளங்களில் மேய்ந்த போது ஞானம் வந்ததோ என்னவோ தெரியவில்லை. என் கிறுக்கல்கள் மெல்ல கண்விழித்து தட்டச்சில் தாண்டவமாட அடம்பிடித்ததன் விளைவு உங்களில் சில பேரின் கண்களிலாவது தட்டுப்பட்டுக் கொண்டிருக்கின்றேன்.
ஹைகூவை பற்றி அறிந்து கொண்டது சென்னையில் 10 ரூபாய்க்கு வாங்கிய ஒரு ஆங்கில ஹைகூ புத்தகத்தின் முகவுரையிலிருந்து. ஆனால் அதிலிருந்த ஹைகூக்களின் அர்த்தத்தைத்தான் முழுவதுமாக அறியமுடிவில்லை.
ஆனால், எனக்குள்ளும் ஹைகூ எழுத ஒரு சின்ன ஆசை…. எனக்குத் தோன்றியதை எழுதிக்கொண்டிருக்கின்றேன். ஹைகூ தானா இது என்று நீங்கள் தான் கூறவேண்டும்.
எனது மற்ற தளங்களில் சிதறிக்கிடக்கும் ஹைகூக்களை தொகுப்பதற்கு ஒரு தளமாகவே இது…